தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு (செவ்வாய் 01.02.2022) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் ஆகும்
இதனிடையே சென்னை, கலைவாணர் அரங்கில் ‘நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கிளவ்டு கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஜப்பான், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியின்பொது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாள் ஆகும். மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்.
பட்டப்படிப்பை தாண்டி தனித்திறமை இருந்தால் தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது. இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களை மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் விருப்பமுள்ள படிப்பில் சேர்ந்து பட்டம் பெறுவதுடன் அது குறித்து முழு தெளிவு பெற வேண்டும்.
படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக இல்லாமல், வேலை சார்ந்ததாக மாறவேண்டும். மூன்று பட்டங்கள் பெற்றவர்கள் கூட நான்கு பேர் முன்பு பேச தயக்கம் காட்டுகிறார்கள், இளைய சக்தியை முழுமையான திறமையானவர்களாக மாற்ற நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிகள் வழங்கப்படும். ஒரு துறை சார்ந்த தெளிந்த அறிவு இல்லை என்று சொல்வதும் வருத்தமளிக்கிறது. கற்றவர்களுக்கு தனித்திறமை இல்லை என்பது கவலைப்பட வேண்டிய ஒன்று
நான் முதல்வன் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் உரக்கச் சொல்லும் போது உங்களுக்குள் நம்பிக்கை பிறக்கும். நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என மனதிற்குள் இருக்கும் தடையை அகற்றும் நோக்கில் நான் முதல்வர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொழித் திறமையை மேம்படுத்தவும், இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படும். இன்று முதல் நீங்கள் புதிய மனிதர்களாக மாறபோகிறீர்கள். இந்தியாவின் இளைய சக்தியை பார்த்து தான் உலக நாடுகள் பயப்படுகின்றன. தனித்த திறமையை மாணவர்கள் கண்டறிந்து செயல்பட வேண்டும். படிப்பு என்பது திறமை சார்ந்ததாக மாற வேண்டும். 2026க்குள் இளைஞர்களின் திறன் மேம்பட வேண்டும் என்பதே இலக்கு
பெற்றோர்கள் சொன்னார்கள் என்பதற்காக பொறியியல், மருத்துவம் பயில வேண்டாம். எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தேர்வு செய்து அதில் சேர வேண்டும். படித்தால் மட்டும் போதாது. படிக்கின்ற படிப்பில் முழு தெளிவு கொண்டிருக்க வேண்டும்.
பெற்ற தாய் போல மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம்” என்று அவர் கூறினார்.