மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி. பி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையை கூட்டி நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது.
அதை கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் கவர்னர் 142 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். கவர்னர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ந்தேதி சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 8-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழக சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.கூட்டம் தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு பேசினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது நீட் தேர்வு முறையானது என்று ஆளுநர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
காமாலை கண்ணால் பார்ப்பது போன்று ஒரு தலைபட்சமான முறையில் குழுவின் அறிக்கை உள்ளது என ஆளுநர் கூறியுள்ளார்.உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட்டது உகந்ததா? என்று சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். எனது பொறுப்பில் இருந்து நான் கடுகளவும் தவற மாட்டேன். இங்கு பேசுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவு மீதான கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் ஆளுநரைப் பற்றி கண்டிப்பாக இங்கே பேசக்கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை செய்தி உரையாக
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதன் பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் நீட் விலக்கு மசோதா தொடர்பாக நடத்தப்பட்ட அரசின் ஆய்வுகளை விளக்கமாக கூறினார். பிறகு கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பது சரியானது அல்ல. அவர் செய்த மதிப்பீடுகள் தவறானவை என்று குறிப்பிட்டார். அவர் பேசி முடித்ததும் அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒவ்வொருவராக பேசினார்கள். சட்டசபை சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டதை அனைத்துக் கட்சி தலைவர்களும் வரவேற்றனர். ஆனால் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் கவர்னரின் நடவடிக்கையை ஆதரித்து பேசினார்கள்.
அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசி முடித்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், “நீட் தேர்வு என்பது பலி பீடம் போன்றது. பாராளுமன்றத்தில் முரண்பட்ட சட்டம் இயற்றப்பட்டால் அதற்கு எதிராக மசோதா கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது. நீட் விலக்கு மசோதாவில் தமிழகம் உறுதியாக உள்ளது. இந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி இருப்பதன் மூலம் சட்டசபை இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது. நீட் விலக்கு மசோதாவை தமிழகம் மீண்டும் நிறைவேற்றி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒளிவிளக்கை ஏற்றி வைத்து இருக்கிறோம்” என்று பேசினார். அதன்பிறகு மதியம் 12.57 மணிக்கு நீட் விலக்கு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி குரல் ஓட்டெடுப்பு நடத்தினார். அதில் நீட் விலக்கு மசோதா மீதான தீர்மானம் மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தீர்மானத்தை நிறைவேற்றி தர கோரி பேசினார். அதன் அடிப்படையிலும் நீட் விலக்கு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.