தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்த விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார். கட்சியை தொடங்கிய ஓர் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார். தே.மு.தி.க.வினர் 8.4 சதவீத ஓட்டுகளை பெற்றனர். விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார். தமிழக அரசியல் களத்தில் அரைநூற்றாண்டு காலமாக வேறு எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு இவ்வளவு சதவீத வாக்குகளைப் பெறவில்லை. இது மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் தே.மு.தி.க.வை பேச வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. அப்போது அந்த கட்சி 10 சதவீத வாக்குளை அள்ளியது. இப்படி சட்டமன்ற தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை அந்த கட்சி பெற்றது.

இதனால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க 2011-ம் ஆண்டு ஜெயலலிதா விரும்பினார். இதையடுத்து தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு 41 தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியது. இதில் 29 தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். இப்படி தான் சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு சாதித்த தே.மு.தி.க.வுக்கு யாரும் எதிர்பாராத வகையில் 2011-ம் ஆண்டு தேர்தல் அமைந்திருந்தது. தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாம் வியந்து பார்க்கும் அளவுக்கு விஜயகாந்தின் வளர்ச்சி அப்போது இருந்தது. இது அடுத்தடுத்த தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. எடுத்த தவறான முடிவுகளால் அந்த கட்சி தோல்விப் பாதையில் பயணிக்க தொடங்கியது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க. 14 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தி மக்கள் நல கூட்டணி தலைவர்கள் களம் கண்டனர். இந்த கூட்டணியில் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுமே தோல்வியை தழுவினார்கள். டி.டி.வி.தினகரன் கட்சியுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. இதன் பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. மண்ணைக் கவ்வியது. அந்த வகையில் தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்தது. அந்த கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. ஆனால் அந்த கூட்டணியை தொடர்ந்து கொண்டு செல்ல தே.மு.தி.க.வால் முடியவில்லை. இதன் காரணமாகவும், தேர்தல் நேரங்களில் எடுத்த திடீர் முடிவுகள் காரணமாகவும் தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க.வினர் உற்சாகமின்றி காணப்படுகிறார்கள். கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதால் பல இடங்களில் தே.மு.தி.க.வினர் போட்டியிடாமல் விலகியுள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து இடங்களிலுமே அந்தக் கட்சி போட்டியிடவில்லை. இதற்கு போட்டியிடுவதற்கு ஆட்கள் இல்லாததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தே.மு.தி.க.வினரோ வேறு மாதிரியாக இதனை பார்க்கிறார்கள். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நாங்கள் களமிறங்கியுள்ளோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கட்சிப் பணிகள் அனைத்தையும் அவரது மனைவி பிரேமலதா தான் கவனிக்கிறார்.
ஆனால் தற்போது அறிவிக்கப்படாத தலைவராகவே அவர் இருந்து வருகிறார். அந்தளவுக்கு கட்சியில் பெரும்பாலான அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் தே.மு.தி.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் மற்ற கட்சிகளைப் போன்று தே.மு.தி.க.வும் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் தே.மு.தி.க.வின் வளர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? மீண்டும் தே.மு.தி.க. தலைநிமிருமா? என்பது அந்த கட்சியிலேயே பேசும்பொருளாக அமைந்துள்ளது.மொழியாக்கச் சமூகம் சரிபார்த்தது என்பதைக் குறிக்கும் ஐகான்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க