1. திமுக உள்கட்சி பூசலால் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது. சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக பிரமுகர் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் திமுகவினர் திங்கள்கிழமை உட்கட்சி பூசலில் ஈடுபட்டதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி அதிகாரிகள் அந்த அலுவலகத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனர். மேலும் போட்டியிட கொடுத்த வாய்ப்பு திடீரென மறுக்கப்பட்டதால் திமுக பிரமுகர் குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டார். மேலும் அவரது மனைவி அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி நகராட்சி 22-வது வார்டு கெஜலட்சுமி நகரில் வசித்து வருபவர் மகேந்திரன்(48). இவர் 22-வது வார்டு திமுக வட்ட பிரதிநிதியாக உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திமுக அறிவித்திருந்த வேட்பாளர் பட்டியலில் வந்தவாசி நகராட்சி 22-வது வார்டு வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து 22-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் இவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் 22-வது வார்டு காங்கிரஸுக்கு திடீரென ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், வேட்பு மனுவை வாபஸ் பெறும்படியும் திமுக தரப்பிலிருந்து மகேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டதாம். இதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவிக்கவே வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் முன்னிலையில் மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

இதிலும் வேட்புமனுவை வாபஸ் பெறும்படி மகேந்திரன் வற்புறுத்தப்பட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது குடும்பத்துடன் அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

அப்போது, மகேந்திரனின் மனைவி பாக்கியலட்சுமி இருமுறை அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா மகேந்திரன் குடும்பத்தினரை சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாருக்கும், மகேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் உரிய பதில் அளிப்பதாக கூறிவிட்டு எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-ஆரணி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எம்எல்ஏ அலுவலகம் சீல் வைப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகளின்படி அதிகாரிகள் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை மூடி சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால் சீல் வைக்கப்படாததால் திமுக வார்டு ஒதுக்கீடு பணிகள் அங்கு நடந்து வந்தன. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அந்த அலுவகத்தில் திமுகவினர் திங்கள்கிழமை உட்கட்சி பூசலில் ஈடுபட்டதை அடுத்து அதிகாரிகள் அந்த அலுவலகத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons