என்னாச்சு திமுகவுக்கு என்று தெரியவில்லை.. இந்த விவகாரம் தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்துவிட்டதா என்றும் புரியவில்லை.. ஆனால், பாஜக படுகுஷியில் இருக்கிறது..!
இதற்கு முன்பு எந்த உள்ளாட்சி தேர்தலும் இந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்காது.. அதிமுகவும் திமுகவும்தான் போட்டிக் கொண்டு தேர்தலை சந்திப்பார்கள் என்றால், இவைகளின் கூட்டணி கட்சிகள் அதற்கு மேல் டஃப் கொடுத்து வருகின்றன.
தங்களுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டு வாங்குவது, இல்லாவிட்டால், அந்த குறிப்பிட்ட
வார்டுகளில் மட்டும் தனித்து போட்டியிடுவது என்ற புது உத்தியை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன.
கேட்ட தொகுதியை தராவிட்டால், நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று மொத்தமாகவே கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பாஜக, பாமகவை காட்டிலும், ஒன்றிரண்டு சாதகமான இடங்களில் மட்டும் தனித்து போட்டி, மற்றபடி திமுக கூட்டணியில் இணைந்துதான் தேர்தலை சந்திக்கிறோம் என்று கூட்டணி கட்சிகள் சொல்வது, திமுக மேலிடத்துக்கு ஆகச்சிறந்த பலமாகவே பார்க்கப்படுகிறது.. எக்காரணத்தை கொண்டும் கூட்டணி உடைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவுக்கு பாஜக ஒரு ஜெர்க்கை தந்துள்ளது.. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் இருக்கின்றன.. இந்த பதவிகளுக்கு திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சைகள் என்று மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்… வேட்புமனு பரிசீலனையில் அனைவரது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் விட்டன..
இந்த கமுதியில் அரசியல் கட்சிகளை விட சுயேச்சைகள் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்… அதிமுக -2, பாஜக – 6, திமுக -8, கம்யூனிஸ்ட் – 1 வார்டுகளில் களம் காண்கின்றன… இதில், 14வது வார்டில் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜாவை எதிர்த்து யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையாம்.. அதிமுக, மட்டுமில்லை, திமுக உட்பட எந்த கட்சிக்காரர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லையாம்.. அந்த வார்டில் சுயேச்சைகள் யாரும் பாஜகவை எதிர்த்து போட்டியிடாததால் சத்யா ஜோதிராஜா போட்டியின்று வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடமிருந்து சத்யா ஜோதிராஜாவுக்கு வாழ்த்து பறந்துள்ளது.. தமிழகத்தில் பாஜக மலரவே மலராது என்று திமுகவினர் சொல்லி கொண்டிருக்கும்போது, பாஜக வேட்பாளரை எதிர்த்து திமுகவினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூட முன்வராத சம்பவம் பாஜகவுக்கு சாதகமாக மாறி உள்ளது.. அதுமட்டுமல்ல, முதல்முறையாக தனித்து போட்டியிடும் பாஜகவுக்கு இந்த முதல் வெற்றியானது ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.