1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் ஆனார்.
54 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
விக்ரம் லேண்டரிலிருந்து இறங்கிய ரோவர் பிரக்யான் நிலவின் நிலப்பரப்பில் தனது பணியை தொடங்கியுள்ளது.
ரோவர் பிரக்யான், ஒரு நொடியில் ஒரு செ.மீ மட்டுமே நகரும். எனினும், நிலவில் இந்த சிறு அடி, உலக அரசியலிலும் நிலவு பொருளாதாரத்திலும் எவ்வளவு முக்கியம் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியும்.
“இந்தியா சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக நிலாவில் தரையிறக்கியதால், உலக அரசியலில் மிகப்பெரிய அடியை முன்னெடுத்து வைத்துள்ளது” என்று இண்டர்நேஷனல் கரண்ட் அஃபயர்ஸ் ஃபாரின் ஃபாலிசி கூறுகிறது.
தற்போது நிறைய நாடுகள், விண்வெளியில் ஆராய்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்காக நிறைய பணமும் செலவு செய்கின்றனர்.
இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே நிலவின் தென் துருவத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நேரத்தில், வெற்றிகரமாக சந்திரயான் – 3 தரை இறங்கியதால் தென் துருவத்தில் புதிய ஆய்வுகள் மேற்கொள்ள வழி வகுக்கும்.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி துறையின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை (ஒரு லட்சம் கோடி டாலர்- இந்திய மதிப்பில் 82 லட்சம் கோடி ரூபாய்) வரும் ஆண்டுகளில் தொட்டு விடும் என்கிறார்.
சந்திரயான் – 3 -ன் வெற்றிக்கு பிறகு, இந்த இலக்கை அடைவது கடினமாக இருக்காது என்றும் பேசப்படுகிறது.