சென்னையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது தொடர்பாக திட்டங்களை தயாரிக்க அமைக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது கோவிட் மிரட்டியது . அதனை அடக்கி இருக்கிறோம். தற்போது ஒமைக்ரான் மிரட்டல் வந்துள்ளது. இடையே மழை வெள்ளம். அதிகப்படியான மழை வெள்ளம் பெய்துள்ளது. பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு உள்ளது. வரலாறு காணாத மழை பெய்த போதும், அதிகளவு பாதிப்பு ஏற்படாததற்கு தமிழக அரசின் நடவடிக்கையை காரணம். நீர்நிலைகள் நிரம்பிய சூழலில் மழை தொடர்ந்து பெய்தது.
அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். நானும் சென்னை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தேன்.மழை, வெள்ள பாதிப்புகள் அதற்கான காரணங்கள் குறித்து மக்களை விட அதிகாரிகள் தெளிவாக உள்ளனர். தூத்துக்குடியில், பெண் ஒருவர் தண்ணீர் தேங்கியதற்கான காரணம் குறித்து என்னிடம் விளக்கினார். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், நீர்வரத்து கால்வாய்களை அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கண்டனம்
இதனிடையே, ராஜ்யசபாவில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது கண்டனத்திற்குரியது. பார்லிமென்டில் உள்ள பெரும்பான்மை மூலம் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.