திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவின் செல்போனில் தொடர்புகொண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மதுரை அலுவலகத்திற்கு வரும்படி கோரியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த டாக்டர் சுரேஷ்பாபு மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார். அங்கு அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை சந்தித்தார். அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அமலாக்கத்துறை வசம் வந்திருப்பதாக கூறிய அன்கிட் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 3 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டுமென கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் சுரேஷ்பாபு தன்னால் 3 கோடி ரூபாய் தர இயலாது என்று கூறியுள்ளார். இறுதியில், 51 லட்ச ரூபாய் கொடுக்கும்படி அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி லஞ்சம் கேட்டுள்ளார்.

அதன்படி கடந்த நவம்பர் 1ம் தேதி சுரேஷ்பாபு முதற்கட்டமாக 20 லட்ச ரூபாய் லட்சத்தை அன்கிட் திவாரியிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ்பாபுவை மீண்டும் தொடர்புகொண்ட அன்கிட் திவாரி மீதமுள்ள 31 லட்ச ரூபாயை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்ட டாக்டர் சுரேஷ்பாபு, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுரேஷ்பாபுவிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியிடம் லஞ்சமாக கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி, நேற்று திண்டுக்கல் அருகே மதுரை நான்கு வழிச்சாலையில் தோமையார்புரம் அருகே சுரேஷ்பாபுவிடமிருந்து ரூ. 20 லட்சம் லஞ்சப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி பெற்றார். அப்போது, அங்கு காரில் பின் தொடர்ந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்கிட் திவாரியை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அன்கிட் தனது காரில் தப்பிச்சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கிலோ மீட்டர் விரட்டி சென்று பிடித்தனர்.

பின்னர், அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கும் சோதனை நடத்தினர். இரவு முழுவதும் இந்த சோதனை நீடித்தது.

இந்நிலையில், மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் 13 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை இன்று காலை நிறைவடைந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் 15ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons