டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரங்களுக்கு வரும் நவ.1 முதல் மின்சாரம் மற்றும் சி.என்.ஜி., ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என சி.ஏ.க்யூஎம். எனப்படும் காற்று மாசு தர மேலாண் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசு, ஏற்கனவே மோசமடைந்து உள்ளது. இதனால் மக்கள் சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறால் ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். மாசை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க, உச்ச நீதிமன்றம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதையடுத்து காற்று மாசை முழுமையாக கட்டுப்படுத்திட கடந்த 2020ம் ஆண்டு பி.எஸ். -4 எனப்படும் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசு மேலாண் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,வரும்
நவ.1-ம் தேதி முதல் டெல்லி, அரியானா, உ.பி ஆகிய மாநிலங்களில் உள்ள பெரு நகரங்களில் இருந்து டெல்லிக்கு வரும் வாகனங்களில், மின்சார வாகனங்கள், சி.என்.ஜி. எனப்படும் (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.