‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கவர்னர் அந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்குஸ் அனுப்பிவைத்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு நாள் காலம் தாழ்த்திய நிலையில், தற்போது திடீரென அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்
இந்த நிலையில், ‘நீட்’ தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 12 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பா.ஜ.க. புறக்கணிப்பதாக நேற்றே அறிவித்து விட்டது.
சட்டசபை சிறப்பு கூட்டம்
கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்கள். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவு செய்வதுடன், தமிழக கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பும் தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.
எனவே, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நிறைவேற்றுவது குறித்தும், அதற்கான தேதி குறித்தும் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.