இதுகுறித்து அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி அவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன், சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
அதற்கான தகுதி மற்றும் தகுதியற்ற நேர்வுகள் குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டன. வெளிமாவட்டங்களில் உள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தரவுகளும் பெறப்பட்டுள்ளன. ஒரே ஆதார் எண்ணுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பொது நகைக்கடன் பட்டியல், ஒரே ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட பொது நகைக்கடன் பட்டியல்,
ஆதார் எண் தராமல், ரேஷன் எண்ணை மட்டும் அளித்தவர்களின் தரவுகளை மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு தொகுக்கப்பட்ட கடன்தாரர்கள் பட்டியல், ரேஷன் எண் அளிக்காமல் ஆதார் நம்பரை மட்டும் அளித்தவர்களின் தரவுகளை பிற மாவட்ட தரவுகளுடன் ஒப்பிட்டு தொகுக்கப்பட்ட கடன்தாரர்கள் பட்டியல் ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுதான் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.
ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட அனைத்து பொது நகைக்கடன்கள், ஒரே ரேஷன் அட்டை எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட அனைத்து பொது நகைக்கடன்கள் பெற்று நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டும்.
31.3.2021-க்கு பிறகு வழங்கப்பட்ட பொது நகைக்கடன், நகைகள் இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன், போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன், கடன் தள்ளுபடி விருப்பம் இல்லாதவர்களின் நகைக்கடன், பிற மாநில முகவரிகளைக் கொண்ட ஆதார் அட்டையில் பெற்ற நகைக்கடன், பிற மாநிலங்கள் வழங்கிய ரேஷன் அட்டையில் பெற்ற நகைக்கடன் ஆகியவை தள்ளுபடிக்கு தகுதியானவை அல்ல. தகுதி பெற்றவர்களின் விவரங்களில் சந்தேகம் எழுந்தால் அவர்களை தகுதியற்றவர்களின் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும். தகுதி பெற்றோர் மற்றும் தகுதி பெறாதோரின் பட்டியலை அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.