இந்தியாவில் மக்களால் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆட்சி முறை நிறுவப்பட்ட போது சென்னை மாகாணத்திலும் தேர்தல் நடந்தது. 1920-ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் எல்லாம் சென்னை மாகாணத்தின் சட்டமன்றம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வந்ததாகவும், அப்போது இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் தான் நிர்வாக நெறிமுறைப்படி சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் ஆட்சியின் விழிமியங்களை உருவாக்கிய மாமன்றத்தில் இந்த நாள் என்பது மிக முக்கியமானது. ஜனநாயகத்தை காக்க மக்களாட்சியின் மாண்பை காப்பாற்றுவதற்காக கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக கல்வி உரிமையை வென்றெடுப்பதற்காக இன்று நாம் கூடி இருக்கிறோம்.

நீட் தேர்வுக்கு எதிராக விவாதிப்பதற்காக மட்டும் நாம் கூடவில்லை. நமது தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் இறையாண்மையை உரிமையை காப்பாற்றுவதற்காகவும் கூடி இருக்கிறோம். பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட இந்திய பெருநாட்டை உண்மையில் காக்கும் உன்னதமான தத்துவம் என்பது கூட்டாட்சி தத்துவம். அந்த கூட்டாட்சி தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் இங்கு கூடி இருக்கிறோம். 16 வயதிலே அரசியல் களத்துக்குள் நான் நுழைந்தேன். எனது பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அந்த உணர்வோடு தான் இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்தது இந்த சட்டமன்றம். நமது அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர உந்து சக்தியாக அமைந்தது இந்த சட்டமன்றம்.
அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமி‌ஷன் அறிக்கையை செயல்பட வைத்ததும் இந்த சட்டமன்றம் தான். அரசு கல்லூரி மாணவர்களுக்கு பொறியியல் உள்பட தொழில் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதும் இந்த சட்டமன்றம். அகில இந்திய தொகுப்பிற்கு அளிக்கும் மருத்துவ இடங்களில் 27 விழுக்காட்டில் இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்துக்கும் பெற்றுத் தந்தது இந்த சட்டமன்றம் தான். இன்றைக்கு இருக்கிற 69 இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தி சாதனை படைத்தது இந்த சட்டமன்றம். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து இதே சட்டமன்றத்தில் சட்டம் ஏற்றப்பட்டது.

நீட் தேர்வில் வெற்றிபெற ஆள்மாறாட்டங்கள் நடந்து இருக்கின்றன. தேர்வர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் முறைகேடுகள், மதிப்பெண்களை திருத்தம் செய்வது, தேர்வு எழுத மாற்று நபர்களை பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகள் வழக்கமாகிவிட்டன. நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது. அது மாணவர்களுக்கு பலி பீடம். சில மாணவர்களை சிறைச்சாலைக்கும், சில மாணவர்களை கல்லறைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? நீட் தேர்வு என்பது ஊரக மாணவர்களை மருத்துவ கல்லூரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. மாணவர்களின் மருத்துவ கனவுக்கு தடுப்புச்சுவராக உள்ளது. இது ஏழை-எளிய மாணவர்களை ஓரம் கட்டுவதற்காக கொண்டுவரப்பட்டது.
நீட் விலக்கு கோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதற்கு கூறிய காரணங்கள் சரியானவை அல்ல. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்து கேட்டே ஏ.கே.ராஜன் குழுவினர் அறிக்கை அளித்துள்ளனர். நீட் தேர்வு வருவதற்கு முன்பு 90 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்று வந்தனர். பள்ளிகளில் படித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் தகுதி என்ற போர்வையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவுத்தீண்டாமை அகற்றப்பட வேண்டும்.
நீட் என்பது சமூக நீதிக்கு எதிரானது. பயிற்சி பெற முடியாதவர்கள், நீட் தேர்வில் வெற்றிபெற முடியாத நிலைதான் உள்ளது. நீட் தேர்வு பணக்கார நீதியை பேசுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் தான் சமூக நீதியை பேசுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை வெறும் நியமன பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானதல்லவா? பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்? என்பது தான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி? அரசியல் அமைப்புச் சட்டம் கூறக்கூடிய சமத்துவத்துக்கு எதிரானது நீட் தேர்வு. மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் மூலம் சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது. நீட் விலக்கு சட்ட முன் வடிவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பி வைப்பதன் மூலமாக இந்தியாவுக்கே ஒரு ஒளி விளக்கை நாம் ஏற்றி வைக்கிறோம்.

ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை இதே சட்டமன்றத்தில் முன் மொழிந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் நீட் விலக்கு மசோதாவை காலம் தாழ்த்தாமல் ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன். அரசியல் சட்டப்பிரிவு 254-1-ன் கீழ் மாநில சட்டமன்ற கூட்டம் நிறைவேற்றினால் அரசியல் சட்டப் பிரிவு 200-ன் கீழ் அதற்கு ஒப்புதல் வழங்கக்கூடிய அதிகாரத்தை ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்ட முன் வடிவு சொந்த கொள்கைக்கு மாறாக உள்ளது என்று நிராகரிக்காமல் அமைச்சரவை எந்த அறிவுரை வழங்குகிறதோ அதன்படி நடக்க வேண்டும். 13.9.2022 அன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்த சட்ட முன் வடிவை நாம் நிறைவேற்றினோம்.

அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் அரசியல் சட்ட கடமை. அந்த கடமையை முறையாக இனியாவது ஆளுநர் செய்வார் என்று நான் நினைக்கிறேன். எதிர் பார்க்கிறேன். நீட் விலக்கு சட்ட முன்வடிவை இந்த அவையில் மீண்டும் நான் முன்மொழிகிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன்களை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் அரசியல் சட்டம் வழங்கி இருக்கிற அதிகாரத்தின் கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் நீட் விலக்கு வடிவை காலம் தாழ்த்தாமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நான் நம்புகிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons