தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்ட போது, “சிறு தானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுவதோடு, அதற்கான விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானிய வகை அரிசியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, சென்னை, கோவை போன்ற நகரங்களில் ரேஷன் கடை மூலம் விற்பனை செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னை மற்றும் கோவையில் சில கூட்டுறவு ரேஷன் கடைகளில் ஏற்கனவே வழங்கப்படும் பொருட்களுடன் சிறு தானியங்களையும் பரீட்சார்த்த முறையில் விற்பனை செய்யலாம் என்று கூறியுள்ளார். இது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டது. சிறுதானியங்களை கொள்முதல் செய்வது, அவற்றை மதிப்பு கூட்டுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

  • இன்று முதல் அனுமதி:

இந்நிலையில், அரசுக்கு ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்களை வாங்கி விற்பனை செய்வது குறித்த நடைமுறைகளை வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் இயக்குநர் அளித்துள்ளார். அதில், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் துறை, வேளாண் உற்பத்தி அமைப்புகள், வேளாண்மை பல்கலைக்கழகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை தேர்வு செய்து குழு அமைக்கலாம் என்றும், அந்த குழுவின் ஆலோசனைப்படி சிறுதானிய விற்பனை நடைமுறைகளையும், விலையையும் நிர்ணயிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, சென்னை, கோவையில் கூட்டுறவு மற்றும் சிவில் சப்ளைஸ் கழகம் நடத்தும் ரேஷன் கடைகளில் பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களை விநியோகிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதற்காக அமைக்கப்படும் குழுவில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைவராக இருப்பார். வேளாண்மை இயக்குநர், வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் இயக்குநர், வேளாண் உற்பத்தி அமைப்பு பிரதிநிதி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பிரதிநிதி, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பிரதிநிதி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினராக இருப்பார்கள்.

  • 2021க்கான தமிழ் வளர்ச்சி துறை விருதுகள் – தமிழக அரசு அறிவிப்பு!

அதோடு, மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவிலான குழுவை இதற்கென்று நியமித்துக் கொள்ள வேண்டும். ராகி, கம்பு, திணை, குதிரைவாலி அரிசி, சாமை, வராகு உள்ளிட்ட சிறுதானியங்களை அவற்றை உற்பத்தி செய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யலாம்.

மதிப்பு கூட்டப்பட்ட அந்த தானியங்களையும் அந்த அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யலாம். 500 கிராம், ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைக்க வேண்டும். அதில் விலை, உபயோகிக்கும் கால அளவு, சான்று எண் ஆகியவற்றை அச்சிடப்பட வேண்டும். இது குறித்த தகுந்த விளம்பரங்களை மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons