காஞ்சிபுரம்: பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஏகனாபுரம் மக்கள், லோக்சபா தேர்தலை புறக்கணித்த நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதில்லை என, அறிவித்துள்ளனர். இதனால், தேர்தல் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
போராட்டம்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்துார் சுற்றிய 20 கிராமங்களில், 5,600 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளை, தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஏர்போர்ட் திட்டத்திற்கு எதிராகவும், நிலங்களை வழங்க மறுத்தும், ஏகனாபுரம் கிராம மக்கள் பல வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராமத்திலேயே 1,000 நாட்களை கடந்து போராட்டம் நடத்தினர்.
பரந்துார் ஏர்போர்ட் திட்ட எதிர்ப்பு குழு என ஒரு குழுவாக இணைந்து, ஆர்ப்பாட்டம், மறியல் என, மூன்று ஆண்டுகளாக பல வகையில் போராட்டங்களை நடத்தினர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
புறக்கணிப்பு
கிராமத்தில், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு எதிராக, 17 முறை தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், கிராம சபை கூட்டங்களையும் புறக்கணித்தனர்.
ஏகனாபுரம் மக்கள் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், தமிழக அரசு நில எடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தியது. நில எடுப்பு பணிகள் துவங்கி, தற்போது 1,500 ஏக்கருக்கு மேலாக, பணிகள் முடிந்துவிட்டன. ஏகனாபுரம் கிராமத்தில் இன்னும் நில எடுப்பு பணிகள் ஏதும் துவங்கவில்லை.
முடிவு
இதன் தொடர்ச்சியாக, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்ட, 2 ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டளிக்காமல், தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். தேர்தல் அதிகாரிகள் நடத்திய பேச்சிலும் உடன்பாடு ஏற்படாததால், கிராம மக்கள் ஓட்டளிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ல் நடக்க உள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில், 1,250 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில், இரண்டு ஓட்டுச்சாவடிகள் உள்ளன. சட்டசபை தேர்தலில், இம்முறையும் தேர்தல் புறக்கணிப்பு செய்வார்களோ என, தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், ஏகனாபுரம் கிராமத்தின் போராட்ட குழுவினர், தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதில்லை என, நேற்று அறிவித்தனர்.
இதுகுறித்து, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த போராட்ட குழு தலைவர் சுப்பிரமணி கூறுகையில், ”சட்டசபை தேர்தலை நாங்கள் புறக்கணிக்கப் போவதில்லை. எங்களுக்காக பல அரசியல் கட்சியினர் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். அதில், விருப்பமான கட்சிக்கு ஓட்டளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் ஏகமனதாக எடுத்துள்ளோம்,” என்றார்.
அதிகாரிகள் நிம்மதி
கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஏகனாபுரம் மக்களை தேர்தலில் பங்கேற்க வைக்க, பல கட்டமாக, அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆனால், எந்த பயனும் இல்லை. தற்போது, சட்டசபை தேர்தலை புறக்கணித்தால், அவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்குமோ என, அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
தேர்தல் புறக்கணிப்பு இல்லை என, ஏகனாபுரம் மக்கள் அறிவித்துள்ளதால், தேர்தல் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த 2024ல், அ.தி.மு.க., – தி.மு.க., என, பிரதான அரசியல் கட்சியினர், பரந்துார், ஏகனாபுரம் என, ஏர்போர்ட் திட்டம் அமைய உள்ள கிராமங்களில், லோக்சபா தேர்தலின்போது ஓட்டு கேட்க செல்லவில்லை.
கிராம மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதாலேயே, பல கிராமங்களில் பிரசாரங்களை தவிர்த்தனர். தற்போது, தேர்தல் புறக்கணிப்பு இல்லை என, மக்கள் அறிவித்துள்ளதால் அரசியல் கட்சிகளும் நிம்மதி அடைந்துள்ளன.