70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை தொடர்ந்து. அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்த வாரம் முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர், நாளை டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மான்டவியாவை சந்தித்து பேசவுள்ளதாகவும். பெரம்பலூர் மயிலாடுதுறை தென்காசி, ராணிப்பேட்டை திருப்பத்தூர் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.