கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள், முக்கிய ஊடக பிரதிநிதிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்புக்காக ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். டிஜிட்டல் பாஸ்போர்ட், டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் பல்கலைக்கழகம், டிஜிட்டல் விவசாயம் என்று அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது என்ற அவர், அடுத்த 25 ஆண்டுகள் முடிவில், பாரதி கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
2015ம் ஆண்டு முதல் பெண்களை முன்னிறுத்தியே ஒவ்வொரு திட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், அனைவருக்கும் எரிவாயு திட்டம், கழிப்பறை திட்டம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் பெண்களை முன்னிறுத்தியே செயல்படுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனை இல்லை என்றும், தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்னமும் மின்சாரமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர், இதற்காக பிரகதி என்ற திட்டத்தின் மூலம் மின்சாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சி ஏன் இப்போது இல்லை என்று பரவலாக கேள்வி எழுப்புகின்றனர் என்றும், கொரோனா காலத்துக்குப் பின் பொருளாதார வீழ்ச்சி இல்லை எனவும், இனியும் இந்திய பொருளாதாரம் வீழாது என்றும் குறிப்பிட்ட அவர், கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை எனவும் தனது உரையில் கூறினார்.