மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான சாதுக்கள் குவிந்து வருகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பசுபதிநாத் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யுனெஸ்கோவின் உலகப் பராம்பரியத் தலம் மற்றும் இந்து பக்தர்களின் புனித யாத்திரைத் தலமான பசுபதிநாத் கோயிலின் வளாகத்தில், ராமர் கோயிலின் முகப்பில் சாதுக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகின்றது.
சக்தி பீடங்களில் ஒன்றாக பசுபதிநாத் கோயில் கருதப்படுவதால், இந்த நாட்களில் இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் சாதுக்கள் வருகை தருகின்றனர். இந்தாண்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) மகா சிவராத்திரி வருவதால் நேபாளம் மற்றும் இந்தியாவிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் நாளை மாலைக்குள் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிகளை பசுபதி வட்டார வளர்ச்சி அறக்கட்டளை செய்து வருகின்றது.
சிவபெருமானின் இரவு என அழைக்கப்படும் “மகா சிவராத்திரி” நேபாளத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் இந்து மக்கள்தொகை கொண்ட அனைத்து நாடுகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.