இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில்ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் (எஸ்எஸ்ஏ) சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் இரா.சுதன், கூடுதல் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் நேற்று விவரித்தனர். அப்போது சுதன் கூறியதாவது:
குழந்தைகளின் கற்றல்இடைவெளியை குறைக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் ‘இல்லம் தேடி கல்வி’திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் மாலை வேளையில் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் மகிழ்ச்சியான முறையில் தன்னார்வலர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.
இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் illamthedikalvi.tnschools.gov.in என்றஇணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதுவரை 44 ஆயிரம் பெண்கள் உட்பட 60 ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர்.
சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி, நீலகிரி,மதுரை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா கூறும்போது, ‘‘மரக்காணம் அருகே உள்ள முதலியார்குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்27-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார்’’ என்றார்.