தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட நடிகை விஜயசாந்திக்கு பா.ஜ.க. வாய்ப்பு மறுத்ததால், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை விஜயசாந்தி, கடந்த 1998ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பா.ஜ.க. மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் மாறிய விஜயசாந்தி, பின்னர் 2020ல் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் தெலுங்கானாவில் நவ.,30ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு பா.ஜ.க.வில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர் அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ‘பாரத் ராஷ்டிர சமிதியிடம் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரஸ் போராட வேண்டும்’ என விஜயசாந்தி பதிவிட்டுள்ளார். இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் விரைவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.