தமிழகத்தில் சிலம்பப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.1 லட்சத்தில் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
”தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தைக் கற்றுக்கொண்டால் 80 வயதிலும் இளமையோடு, சுறுசுறுப்போடு, உடல் வலிமையோடு இருக்கலாம். இத்தகைய விளையாட்டானது தேசிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, ஒலிம்பிக் விளையாட்டோடு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலங்களுக்கும் சிலம்பத்தைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சிலம்பத்தைக் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. மேலும், சிலம்பத்தைப் பாடப்புத்தகத்தில் சேர்க்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சிலம்பத்தில் சிறப்புப் பெற்று விளங்கக்கூடிய பயிற்சியாளர்களில் 100 பேரைத் தேர்வு செய்து, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ரூ.1 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் வெளியிட உள்ளார்.
தமிழக அரசு சார்பில் தேவையான இடங்களில் சிலம்ப பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். எவ்விதப் பிரதிபலனையும் பாராமல் ஆங்காங்கே மாணவர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளித்து வருவோருக்கும், இப்பயிற்சிக்கு மாணவர்களை அனுப்பும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் வனப்பரப்பை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதால் அனைவரும் தலா 10 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மேலும், அரசின் மரக்கன்று நடும் திட்டங்களுக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, “தமிழக அரசு அறிவித்துள்ள அண்ணா பிறந்தநாள், பொங்கல் விழாவின்போது சிலம்பப் போட்டியை நடத்துவதற்கான அனுமதியை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்துக்கு அளிக்க வேண்டும்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சிலம்பத்துக்குத் தனி இருக்கை அமைத்துக் கொடுக்க வேண்டும். சிலம்பத்தைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அமைக்கப்படும் குழுவில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் சிலம்பாட்டக் கழகத்தினர் தெரிவித்தனர்.