அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 7ஆம் தேதி இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதிகமுகவிலிருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவு சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாததால் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பெயர், கொடியை பயன்படுத்துவது சரியா என நீதிபதி கேள்வியெழுப்பினார்.
ஆனால் தங்களது தரப்பு வாதத்தை அனுமதிக்காமல் தனி நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது தவறு என்றும் பொதுக்குழு மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இடைக்கால தீர்ப்பு என்றும் அது இறுதித்தீர்ப்பு அல்ல என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.