மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது102). சுதந்திர போராட்ட தியாகியான இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார்.வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த என்.சங்கரய்யா கடந்த சில நாட்களாக சளி-இருமலால் அவதிப்பட்டு வந்தார்.
உடனடியாக அவரை நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அவர் மூச்சு விட சிரமப்பட்டதால் செயற்கை சுவாச கருவி பொருத்தி அவருக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.
டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 102.அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகியான என்.சங்கரய்யா 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
இடது சாரி இயக்கத்தில் என்.எஸ். என்று அன்போடு அழைக்கப்பட்ட கோவில்பட்டி நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் சங்கரய்யா.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திர போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்தியவர். 1938-ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை தொடங்கினார்.
பின்னர் 1939-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம். பின்னர் 1941-ல் பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்த போது தமிழகத்திற்கு குரல் கொடுத்தவர்.
கம்யூனிஸ்டு கட்சியில் 1943-ல் மதுரை மாவட்ட கம்யூனிஸ்டு செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக உயர்ந்தவர்.
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்.
கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் பற்றி மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயும் அதை நிறைவேற்றி காட்டியவர்.
1997-ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, 1998-ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தியவர்.
தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். சிறை வாழ்க்கையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் நட்பு கொண்டவர்.
அதே போல சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி மற்றும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கம் கொண்டவர்.
இவருக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரப்படுத்தி இருந்தது.சங்கரய்யா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.