குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.
அந்தவகையில் இன்று (22-11-2023) முதல் நாளை மறுதினம் (24-11-2023) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை என்பதால் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை இந்த பகுதிகளில் மழை பெய்யலாம்.
அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (23-11-2023) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று (22-11-2023) மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நெல்லை உள்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.