சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த முறை இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், நகர்ப்புறங்களில் உள்ள 200 சிறிய கோயில்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முதல்கட்டமாக ராயப்பேட்டை பகுதியில்உள்ள பழமையான சித்தி புத்திவிநாயகர் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து தரவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை நடத்த, அறநிலையத் துறை துணைஆணையர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுநடத்தி விசாரணை மேற்கொள்வதற்காக அந்த குழுவினர் கோயிலுக்குச் சென்றபோது, அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்தது குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளோம். அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம்நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

பயத்தின் அடிப்படையில், பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதீனங்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் பட்டினப் பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்கும் சமமான அரசாக இந்த அரசு உள்ளது. சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் கோயில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons