நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்திருந்தது.
இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. மாலையில் பல்வேறு இடங்களில் கனமழையும், சாரல் மழையும் பெய்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் ஆறுபோல தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
சங்கரன்கோவிலில் மட்டும் 57 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆலங்குளம் பகுதியிலும் இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு 45 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நகர்புறங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையும் பெய்தது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 138.40 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.91 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 212 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது அணை நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது.
கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையை அடைந்ததால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு அணைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வெள்ளமாக செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணைகளை கடந்து, ஏராளமான தண்ணீர் கடலுக்கு செல்கிறது.