கவர்னர் விவகாரம் எப்படிப் போகிறது என சிறு அலசல். இந்த விஷயத்தில் பாஜக வேறு வழியின்றி அடக்கி வாசிக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது..!
தமிழக பா.ஜ.க.வைப் பொறுத்தவரை திமுக மட்டும்தான் ஒரே குறியாக நினைத்து செயல்பட்டு வருகிறது.. அதற்கேற்றார்போல், “நமக்கு முதல் எதிரியே திமுகதான், அதை மையமாக வைத்து எம்பி தேர்தலுக்கு வேலை செய்யுங்கள்” என்று அமித்ஷாவும் அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாக செய்திகளும் கூறப்பட்டது.
பாஜக என்னதான் எதிர்த்தாலும், திமுகவும் எதற்குமே சளைக்கவில்லை. அதிலும் ஆளுநர் விஷயத்தில் திமுக காட்டிய அதிரடியை பார்த்து, பாஜக மேலிடமே சற்று அதிர்ந்துதான் போனதாம்..
நீட் விவகாரத்தில் அழுத்தம் தந்தால் திமுக ஓரளவு அடிபணியும் என்று பா.ஜ.க. கணக்குப் போட்டது.. அதனால்தான், ஆளுநர் ரவியை வைத்து பலவாறாக நெருக்கடியும் ஏற்படுத்தியது.
மற்றொருபுறம் பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கூட்டி, மாநில அரசுகளுக்கு நெருக்கடியும் தர யோசித்தது. ஆனால், பிரதமரையே காட்டமாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியது, தேசிய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.
அதுமட்டுமல்ல, நீட் விவகாரத்துக்கு காட்டிய எதிர்ப்பை, அப்படியே உல்டாவாக்கி, ஆளுநர் பக்கம் திருப்பிவிட்டது திமுக.
கறுப்பு கொடி, தேநீர் விருந்தைப் புறக்கணித்தது, ஆளுநரை மாற்றக்கோரி மக்களவையில் போட்ட தீர்மானம் போன்று தனக்கு எதிராக திமுக எடுத்த ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு, ஆளுநர் மாளிகையே கடுமையான அதிருப்திக்கும் உள்ளாக்கியிருக்கிறதாம்.
இதனால், திமுகவை மேலும் கடுப்பாக்க முயற்சிகளை கையில் எடுக்க உள்ள நிலையில்தான், திடீரென அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். அதற்கு காரணம், குடியரசுத் தலைவர் தேர்தல் வரப்போவதுதான்.
இப்போதைக்கு பாஜக தரப்பில், 50க்கும் குறைவான சதவீத ஆதரவுதான் கையில் உள்ளது.. அதனால், நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரிய கட்சி தயவும், பா.ஜ.க.வுக்குத் தேவையாக இருக்கிறது.. அந்த வகையில், 3வது பெரிய கட்சி திமுகதான்.
அதனால், திமுகவின் ஆதரவைப் பெற பாஜக ஆர்வம் காட்ட துவங்கி உள்ளதாக தெரிகிறது. அதனாலேயே திமுக அரசு உடனான மோதல் போக்கை ஓரளவு கைவிட யோசித்து வருகிறதாம். ஆளுநர் ரவியையும், திமுக மீதான காட்டத்தைக் குறைக்கச் சொல்லி உள்ளதாம்..
2 முறை டெல்லிக்கு ஆளுநர் ரவி ஏன் அவசர அவசரமாக சென்றார் என்பதற்கான விடை இதுவரை தெரியப்படாமல் இருந்த நிலையில், அவரை சற்று அமைதிகாக்கும்படி சொல்லவே, மேலிடம் அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக இப்படிக் கணக்குப் போட்டாலும், அதற்கு திமுக எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று தெரியவில்லை.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு முதல், நீட் விவகாரம் வரை திமுகவுக்கு பொதுமக்களிடம் அதிருப்தியை பெற்றுத் தந்ததே மத்திய பா.ஜ.க.தான்.
அப்படி இருக்கும்போது, பாஜகவுக்கு தன்னுடைய ஆதரவை திமுக தெரிவிப்பது சந்தேகம்தான் என்கின்றனர் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ வேறு விதமாக சொல்கிறார்கள்.
அதாவது, மத்தியில் பா.ஜ.க.வைப் பகைத்து கொண்டு எந்த ஒரு மாநிலத்தினாலும் ஆட்சி செய்ய முடியாது.
எவ்வளவுதான கருத்து மோதல்கள், அதிருப்திகள் இருந்தாலும், மத்திய அரசின் தயவு கண்டிப்பாக தேவை என்பதை மாநில அரசுகள் உணராமல் இல்லை. அதனால், ஒரேயடியாக பாஜகவை பகைத்துக் கொள்ளவும் முடியாது. அப்படிப் பகைத்துக் கொண்டால், அது அந்தந்த மாநில மக்களைத் தான் நேரடியாக பாதிக்கும்..
எனவே, தி.மு.க.வும் தன்னுடைய மோதல் போக்கை கையில் எடுக்காமல், அதேசமயம், பாஜக பக்கமும் சாய்ந்து விடாமல் நடுநிலைமையுடன் நின்று அனைத்தையும் பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பதவி விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழல் ஏற்படப் போகிறதோ இல்லையோ, தி.மு.க. மீதான காட்டத்தை பாஜக குறைத்துள்ளதே அக்கட்சிக்கு ஒரு சறுக்கல்தான் என்கிறார்கள். என்ன நடக்கப் போகின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்..!