தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது:-
நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய தள்ளுபடி தொகையான 160 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது.
வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என இந்த அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரிப்பற்றாக்குறை நிலவியபோதும், பெருமளவில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டபோதும், தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதற்கு இந்த அரசின் சீரிய முயற்சிகளே காரணமாகும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மக்களாட்சியினை கடைக்கோடியிலும் உறுதிப்படுத்துவதே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். இவ்வரசு பதவியேற்றவுடன், நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியது.
மேலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு 02.10.2021 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைகள் நடைபெற்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களையும் விரைவில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம், கிராமங்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்த அரசு புத்துயிர் அளித்துள்ளது. இந்த ஆண்டு 1,997 ஊராட்சிகளில் 1,200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையும், பகுத்தறிவு சிந்தனையையும் ஊக்குவிப்பதற்காக 4,116 கிராமப்புற நூலகங்கள் 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
நாட்டில் நகர்ப்புறங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். நகர்ப்புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு தீர்மானித்துள்ளது. சாலைகள், தெரு விளக்குகள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், நீராதார அமைப்புகள், மின் மயானங்கள் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகின்றது.
வளர்ச்சித் திட்டங்களில் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு, நிறைவாகச் செயல்பட்ட நமக்கு நாமே திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.