சென்னை,
சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி(41). இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், ரவுடி பாலாஜி 12 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபல ரவுடி சிடி மணி வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகி விட்டு காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில், காக்காதோப்பு பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த காக்காதோப்பு பாலாஜி தலைமறைவானார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை இடைமறித்து போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர். காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக டிரைவர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் டிக்கியை திறந்துள்ளார். காரின் டிக்கியை போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தபோது கார் திடீரென புறப்பட்டு சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருப்பது பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என தெரியவந்து.
உடனடியாக அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர். சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிக்கு கார் சென்றுள்ளது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த காக்காதோப்பு பாலாஜி காரை நிறுத்திவிட்டு புதரை நோக்கி ஓடினார். மேலும், போலீஸ் வாகனத்தை நோக்கி கள்ளத்துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார்.
இதனால், போலீஸ் வாகனத்தின் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காக்காதோப்பு பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே காக்காதோப்பு பாலாஜி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த காக்காதோப்பு பாலாஜி?
சென்னை பிராட்வே காக்காதோப்பு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பாலாஜி. 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். காக்காதோப்பில் பிறந்து வளர்ந்ததால், காக்காதோப்பு பாலாஜி என்ற அடைமொழி வந்தது. புறா பந்தயம் வளர்ப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த காக்காதோப்பு பாலாஜிக்கு அப்போது சிறுசிறு அடிதடி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாலாஜியை பார்த்தாலே பயம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை முதல் முறையாக காக்கா தோப்பு பாலாஜி திட்டம்தீட்டி கொலை செய்தார்.
பின்னர் யார் பெரியவன் என்ற நோக்கில் செயல்பட்டு வந்த காக்காதோப்பு பாலாஜி வடசென்னையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார். இதற்கு தடையாக இருந்த சதீஷ் என்பவரை 2009 ஆம் ஆண்டு கொலை செய்தார்.
அதன்பிறகு 2011 ம் ஆண்டு வீட்டின் மேற்கூறையை உடைத்து உள்ளே இறங்கி பில்லா சுரேஷ் என்பவரை அவரது மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் விஜி (எ) விஜயகுமாரையும் காக்காத்தோப்பு பாலாஜி தரப்பு வெட்டிப்படுகொலை செய்தது. இந்த இரட்டை கொலை சம்பவம் இப்போது வரை காக்கா தோப்பு பாலாஜி பெயர் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், செம்மர கடத்தல் தொழிலில் இறங்கினார் காக்கா தோப்பு பாலாஜி.
தற்போது, வடசென்னையை ஆட்டிப்படைக்கும் சம்போ செந்திலுக்கும், காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி சமீப காலமாகவே நடந்து வந்தது. இதற்காக மாறிமாறி தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகியோர் காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகில் வைத்து நாட்டு வெடிகுண்டை காரின் மீது சம்போ செந்தில் வீசினார். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.
போலீசாரின் கிடுக்குப்பிடி காரணமாக கடந்த சில வருடங்களாக நேரடி சம்பவத்திற்குள் நுழையாமல் திட்டம் மட்டும் போட்டு கதையை முடிக்கும் தொழிலையே காக்கா தோப்பு பாலாஜி செய்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜி இன்று போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The short URL of the present article is: https://reportertoday.in/zmfj