நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பொய்களைக் கூறி மக்களை திசைதிருப்பி வருவதாகவும், திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறிவரும் நிலையில் அவருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஆட்டையாம்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பேருந்து நிலையம் அருகே இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது,” பொதுமக்கள் அதிமுக வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இங்கு தறி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். நூல் விலை உயர்வால் தறி தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலாளர்கள பாதிப்பு அடைந்து உள்ளனர் . இதை அரசு கண்டு கொள்ளவில்லை.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியும், ஆனால் திமுகவில் அப்படி இல்லை , அங்கு வாரிசு அரசியல் நடக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தரமான சாலைகள் போட்டு தரப்பட்டது. கிராமங்களிலும் தரமான சாலைகள் போட்டு தரப்பட்டது மக்களுக்கு துன்பம் வரும்போது அவர்களை மீட்கும் கட்சிதான் அதிமுக, இந்த ஒன்பது மாத திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ளார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். 6 சட்டக் கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம். இதன்மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர். ச்ந்ந்லம் மாவட்டம் தற்போது வறண்ட மாவட்டமாக இருக்கிறது.. நாங்கள் பல்வேறு திட்ட பணிகளை செய்து கொடுத்தோம். ஆனால் ஸ்டாலின் நாங்கள் ஏதும் செய்யவில்லை என பச்சை பொய் கூறி வருகிறார். நகர்புற தேர்தலில் ஸ்டாலின் பொய் கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார்.
திமுகவில் ஏழைகளுக்கு என்ன திட்டம் கிடைத்தது, விலையில்லா மடிகணினி கொடுத்தோம். சைக்கிள், புத்தகம் கொடுத்தோம். இதன் மூலம் கல்வி தரம் உயர்ந்தது. இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என கொண்டு வந்தோம். உயர்கல்வி படிப்பில் தமிழகம் முதலிடம். குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் தருவதாக கூறினர் .தரவில்லை. கல்வி கடன் ரத்து என்றனர். ரத்து செய்ய வில்லை. தேர்தல் வந்தால் சொல்வார்கள். பிறகு மறந்து விடுவார்கள். இதனால் திமுக விற்கு பாடம் புகட்ட வேண்டும். திமுகவினருக்கு மக்கள் பற்றி கவலை இல்லை, பொதுமக்கள் சந்திக்க வேண்டும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.