சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா தந்த கிப்ட் தான் தமிழக அரசியலின் கவனத்தை இன்றைய தினம் ஈர்த்து வருகிறது.
2 நாளைக்கு முன்பு நடிகர் விஜய்யை, புதுச்சேரி ரங்கசாமி சந்தித்து பேசினார்.. விஜய்க்கும் ரங்கசாமிக்கும் என்ன சம்பந்தம்? மாநிலம் விட்டு மாநிலம் வந்து, ரங்கசாமி ஏன் இவரை வந்து சந்தித்து விட்டு போகிறார் என்ற பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
அதற்குள் இந்த பக்க மாநிலத்தில் இருந்து வந்து, ரோஜா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.. ஆந்திர மாநில எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இன்று காலை முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்… பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா பேசியபோது, “ஆந்திர மாநிலம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக முதல்வருடன் பேசினேன்..
ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள்… அவ்வாறு வருபவர்களுக்கு சில நேரம் எல்லைப்பகுதிகளில் அனுமதி கிடைப்பதில்லை.. அதனால், எந்தத் தடையுமில்லாமல் அவர்கள் வந்து சேர உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்..
முதல்வர் என்னுடன் பேசும்போது ரொம்ப நாள் பழகியவரை போல நட்புரிமையுடன் பேசினார்… நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கொரோனா காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக நிறைவேற்றுவதாக உறுதி கூறியுள்ளார்.. ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினேன்” என்றார் ரோஜா.. இதற்கு பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலினின் படம் பொறிக்கப்பட்ட சால்வையை செய்தியாளர்களிடம் காட்சிப்படுத்தினார்.
பக்கத்தில் நின்றிருந்த செல்வமணியிடம் இருந்து அந்த சால்வையை வாங்கிய ரோஜா, அதை செய்தியாளர்களிடம் பிரித்து காட்டினார்.. புளூ கலரில் இருந்தது அந்த பட்டு சால்வை.. நடுவில் ஸ்டாலின் சிரிக்கும் உருவ படம் பொறிக்கப்பட்டிருந்தது.. “இதான் அது.. கொஞ்சம் அர்ஜென்ட்டா இதை ரெடி பண்ணிட்டாங்க.. இல்லாட்டி நல்லா வந்திருக்கும்” என்றார்.. முன்னதாக, ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த இந்த பட்டு சால்வையைதான் முதல்வர் ஸ்டாலினிடம் ரோஜா கிப்ட்டாக வழங்கியிருக்கிறார்.