இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி விளையாட்டை சிறுவர் – சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி விளையாடியதாக ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பப்ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செயப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசாரால் தர்மபுரியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இவருடன் இவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின்னர் கிருத்திகா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், பப்ஜி மதனின் 2 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், பப்ஜி மதன் பயன்படுத்தி வந்த யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதனைதொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி ஆபாச யூட்யூபர் மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை அறிவுரைக்கழகம் உறுதி செய்தது. இதனால், ஆபாச யூட்யூபர் பப்ஜி மதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தி தருவதாகவும் அதற்கு ரூபாய் 3 லட்சம் பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமெனவும் சிறைத்துறை அதிகாரி ஒருவர், பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறைதுறை அதிகாரி ஒருவரும் பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவும் பேசும் அந்த ஆடியோவில், சிறைத்துறை அதிகாரி ரூ. 3 லட்சம் பணம் கேட்க, அதற்கு தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் விரைவில் தருவதாகவும் கூறி ரூபாய் 25 ஆயிரம் பணத்தை அனுப்பி வைப்பதாகவும் கிருத்திகா கூறுகிறார். அதன்பேரில் ரூபாய் 25 ஆயிரம் பணத்தை முகில் செல்வம் என்ற நபரின் கூகுள் பே கணக்குக்கு கிரித்திகா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பியுள்ளார். அதற்கான கூகுள் பே ஆதாரமும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த சம்பவம் காவல் துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ விவகாரம் சிறைதுறை தலைமை அதிகாரிகளின் கவனத்துக்கு செல்ல இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது. குறிப்பாக பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தி தர ரூ.3 லட்சம் பணம் லஞ்சம் கேட்கும் ஆடியோ விவகாரம் தொடர்பாக டி.ஐ.ஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிடம் லஞ்சம் கேட்டது உண்மை என தெரியவந்தது. மேலும், கிருத்திகாவிடம் பேசிய நபர் புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சிறைத்துறை டி.ஜி.பி சுனில் குமார் சிங், புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.