அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்

அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவை சிகிக்சை மையம் ரூ.35 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆபரே‌ஷன் அரங்கம் அமைக்கப்படுகிறது. மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முதலாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கம் தமிழகத்தில் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மாநில அரசு மருத்துவமனையில் இந்த வசதி இல்லை. 6 தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் இதனை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

புற்றுநோயை முதல், 2-ம் நிலையிலேயே கண்டறிந்து அதனை குணப்படுத்துவதற்கான மருத்துவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் புற்றுநோய் இறப்புகள் குறையும். மக்களை தேடி மருத்துவ முகாம் மூலம் இதுவரையில் 49 லட்சத்து 79 ஆயிரத்து 565 பேர் பயனடைந்துள்ளனர். தினமும் 15 முதல் 20 ஆயிரம் பேர் பயன் பெறுகிறார்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை 50-வது லட்சம் பயனாளிக்கு முதல்-அமைச்சரே வீடு தேடி சென்று மருத்துவ உதவிகளை வழங்க இருக்கிறார். மேலும் அந்த நிகழ்ச்சியின்போது 188 புதிய ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைக்கிறார். அந்த வாகனம் உயிர்காக்கும் உபகரணங்களுடன் செயல்படும்.

ஏற்கனவே 1,303 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதனுடன் இந்த எண்ணிக்கை 1,491 ஆக உயருகிறது. இன்னுயிர் காப்போம் மகத்தான திட்டத்துக்கு இந்த நவீன ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 18 ஆயிரத்து 580 பேர் பயனடைந்து உள்ளனர். இதற்காக தமிழக அரசு 16 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்து 950 ரூபாய் செலவு செய்துள்ளது. இதன் மூலம் விபத்துகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளனர். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் பணியில் 6 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை. என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons