கேரளாவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல், கண்டெய்னர் லாரியில் தப்பி செல்லும்போது நாமக்கல் அருகே பிடிபட்டது.அப்போது அந்த லாரியில் இருந்த 7 பேரில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அசார்அலி என்பவன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த கும்பல் சென்னையில் வைத்து திட்டம் தீட்டி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் கோவையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.அதாவது கார்டை சொருகி நம்பரை அழுத்திவிட்டு பணத்திற்கான தொகையை டைப் செய்து விட்டு காத்திருந்தால் டேப் வரை வந்து பணம் நின்று விடும். அதன்பிறகு பொதுமக்கள் எந்திரத்தில் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க சென்று விடுவர்.தொடர்ந்து வெளியே காத்திருக்கும் 2 வாலிபரில் ஒருவர் உள்ளே சென்று, எந்திரத்தில் ஒட்டியுள்ள டேப்பை எடுத்துவிட்டு அங்கு குவிந்து நிற்கும் பணத்தை அள்ளி சென்று விடுவார். முதலில் ரத்தினபுரி ஆறு மூக்கு பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் மேற்கண்ட நூதன பணம் திருட்டு தொடங்கியது.பின்னர் அதே வாலிபர்கள் ஆவாரம்பாளையம், கருமத்தம்பட்டி, போத்தனூர் பகுதிகளிலும் ஏ.டி.எம். எந்திரத்தில் டேப் ஒட்டி இதேமுறையில் பணத்தை திருடி சென்று உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வரும் 2 வெளிமாநில வாலிபர்கள் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து அங்கு பணம் வரும் எந்திர பகுதியில் டேப்பை ஒட்டிவிட்டு வெளியே வருகிறார்.தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துவிட்டு பணம் வராமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பின்னர் இன்னொரு நபர் உள்ளே சென்று எந்திரத்துக்குள் சிக்கி குவிந்து கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்ட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.தொடர்ந்து கோவை மாநகர போலீசார் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும கன்டெய்னர் கொள்ளையன் அசார்அலியிடம் காட்டி விசாரணை நடத்தினர். ஆனால் அவன், இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளான். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையே கோவையில் கடந்த சில நாட்களாக கைவரிசை காட்டி வரும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆவடியில் நடந்த ஏ.டி.எம். பணம் கொள்ளையில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கோவையில் சுற்றி திரியும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The short URL of the present article is: https://reportertoday.in/k4qg

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons