சென்னை:தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட ஊராட்சிகளும் இயங்கி வருகின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வார்டு மறுவரையறை, மாவட்ட எல்லை பிரிவு விவகாரம் போன்ற காரணங்களால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.எனவே, இந்த 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கி.பாலசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண, தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. இதில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்கு பெட்டிகள், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் தன்மையினை ஆராய வேண்டும்.அதாவது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து, அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The short URL of the present article is: https://reportertoday.in/i76t

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons