ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தை தொடர்ந்து, விரைவில், தமிழக அமைச்சரவை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதுமே, அவரது மகனும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பதவி ஏற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுக்கு பிறகு, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என, தகவல் வெளியாகியது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. எனினும், அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே, தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் இருக்கும் என, தகவல் வெளியாகியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை செயலாளர்கள் பணியிட மாற்றம் அதிரடியாக நடைபெற்றது. 9 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதேப் போல், உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு, தங்களுக்கு ‘வேண்டிய’ ஐஏஎஸ் அதிகாரிகளை, துறை செயலாளர்களாக நியமிக்கும்படியும், மிரண்டு பிடிக்கும் ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றும்படியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கேற்றபடியே, ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎஸ் – ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தைத் தொடர்ந்து, வரும் நாட்களில், தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.