சிறந்த இதழியலாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் அருணன், உறுப்பினர்கள் – பத்திரிகையாளர்கள் தராசு ஷியாம், சமஸ், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் படைப்பாளர் முனைவர் ரெ. மல்லிகா ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், குழுவின் உறுப்பினர் செயலர் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர்ச. பாண்டியன் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.
சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகளில், சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்றிவரும் இதழியலாளர் ஒருவருக்குஆண்டுதோறும்கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.