சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர்!
5 வருடம் முன்பு கீழே கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாயை உரிமையாளரிடம் ஒப்படைத்தவர் : தூய்மை பணியாளரின் கணவர்!
கணவரைப் போன்ற நேர்மையான தூய்மை பணியாளர்!
சென்னை தி.நகர் முப்பாத்தம்மன் அம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.
அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் பல சவரன் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தூய்மை பணியாளர் பத்மா பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்தார்.
பாண்டி பஜார் போலீசார் பிளாஸ்டிக் கவரை பிரித்து நகைகளை சோதனை செய்த போது அவை ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 சவரன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் தான் கொண்டு போன சுமார் 45 சவரன் நகையை தொலைந்து விட்டதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.
புகார்தாரரான ரமேஷ் என்பவரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததும், தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று தி.நகர் வந்த போது, தன் கையில் வைத்திருந்த நகைப்பையை அருகில் இருந்த தள்ளுவண்டி கடையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து மறந்து சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து நகை சரிபார்ப்பு மற்றும் நகைக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை போலீசார் செய்து வருகின்றனர்.
சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 சவரன் தங்க நகையை கண்டெடுத்து, அதனை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மா என்ற பெண்ணை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
தன் கணவரைப் போன்று யாருடைய நகை பணத்திற்கும் ஆசைப்படாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றியதாக பத்மா தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் கணவர் ஆட்டோ டிரைவர் சுப்ரமணியுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இருவரும் உழைத்து தனது மகனை ஐடி கம்பெனியிலும் மகளை திருமணமும் செய்து கொடுத்துள்ளனர். வாடகை வீட்டில் இருந்தாலும் லட்சக்கணைக்கில் கடன் இருந்தாலும் கணவரைப் போன்று அவரையும் நேர்மையாக பலர் நினைப்பதாக பத்மா தெரிவித்துள்ளார்.
ஏனெனில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மெரீனா கடற்கரையில் ஆட்டோ சவாரி செல்லும் பொழுது கீழே கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை ஆட்டோ டிரைவரான தனது கணவர் சுப்பிரமணி மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியின் நேர்மைக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
ஏழ்மையாக இருந்தாலும் கடன் சுமை இருந்தாலும் அடுத்தவர் நகை, பணத்திற்கு ஆசைப்படாமல் கீழே கிடந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுப்ரமணி மற்றும் அவரது மனைவியான தூய்மை பணியாளர் பத்மா இருவரையும், பலரும் பாராட்டி வருகின்றனர்.