சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த துணிகர கொலை, அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி (வயது 20). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொளத்தூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான (பி பிரிவு ரவுடி) இவர், சுசித்ரா (வயது 21) என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
சுசித்ராவிற்கு ஏற்கனவே சூர்யா என்பவருடன் திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், ஆதியுடன் உறவில் இருந்த சுசித்ராவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த சில நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதி, தனது தோழி சுசித்ராவிற்கு ஆறுதல் கூறுவதற்காக இரவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசித்ராவை சந்தித்து நலம் விசாரித்த பிறகு, வார்டுக்கு வெளியே உள்ள வராண்டாவில் மதுபோதையில் உறங்கியுள்ளார்.
அதிகாலை சுமார் 3:30 மணியளவில், சுசித்ராவின் கணவரான சூர்யா மற்றும் அவரது நண்பர்களான அலிபாய், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் அங்கு வந்துள்ளனர். உறங்கிக் கொண்டிருந்த ஆதியை சுற்றி வளைத்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தலை, கை, கால்கள் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலைப் பகுதி இரண்டாகப் பிளந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பிரசவ வார்டின் எதிரிலேயே நடந்த இந்த படுகொலைச் சம்பவம், அங்கு தங்கியிருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கண்முன்னே நடந்த கொடூரத்தை கண்டு அவர்கள் அலறியடித்து ஓடினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், உடனடியாக விரைந்து வந்து ஆதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்றபோது, மருத்துவமனையில் பாதுகாப்பு மிகவும் குறைபாடாக இருந்துள்ளது. பிரசவ வார்டின் நுழைவு வாயிலில் ஒரு பெண் பாதுகாவலர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். வார்டின் எதிரே ரோந்துப் பணியில் காவலர்கள் யாரும் இல்லை.
மேலும், மருத்துவமனைக்கான காவல் ஆய்வாளர் விடுப்பில் சென்றிருந்ததும், இரவுப் பணியில் வெறும் 4 காவலர்கள் மட்டுமே இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாடுகளே, கொலையாளிகள் எளிதாக குற்றத்தைச் செய்துவிட்டு தப்பிக்க வழிவகுத்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.