கோவையில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் “அரசு போக்குவரத்துக் கழகம்” என்ற வார்த்தைகள் மட்டும் இருக்கும் நிலையில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையை தி.மு.க அரசு விட்டு விட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்ற வார்த்தைக்கு முன்பு தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேரறிவாளன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தி.மு.க அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
நாம் தமிழர் கட்சியினர் பேருந்து நிலையத்திற்குள் முழக்கங்களை எழுப்பியவாறு சென்று பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டியதால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடம் ஏற்கனவே அனுமதி பெற்று இருந்ததால் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேரறிவாளன், திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று நாங்கள் தான் பெயர் வைத்தோம் என்று பெருமைப்பட கூறிக் கொள்கிறார். ஆனால் அவர்களது தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை விட்டுவிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டுமே வைத்துள்ளனர். மாநில சுய ஆட்சி, மாநில தன்னாட்சி என்று பேசிக்கொள்ளும் தி.மு.க தமிழ்நாடு என்ற பெயரை வைப்பதற்கு ஏன் பயப்படுகிறது? ஒன்றிய அரசு வேண்டுமானால் தமிழ்நாடு என்ற வார்த்தையை வைப்பதற்கு யோசிக்கலாம், பயப்படலாம் ஆனால் முதல்வருக்கு ஏன் பயம்?
தமிழ்நாடு என்ற பெயரை தொடர்ந்து முதல்வர் புறக்கணிக்கும் பட்சத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். முதல் முன்னெடுப்பாக ஸ்டிக்கரை தான் ஓட்டினோம். இனிமேலும் தமிழ்நாடு அரசியல் இதனை கேட்கவில்லை என்றால் பெயிண்ட் மூலம் அதனை எழுதுவோம். அந்த நிலைக்கு தமிழ்நாடு அரசு எங்களை தள்ளி விடக்கூடாது. தமிழகத்திற்கு அருகிலுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அரசு பேருந்துகளில் அவர்களது மாநில பெயரை பெருமையாக போட்டுக் கொள்கிறார்கள். தமிழர்களின் வாக்கு மட்டும் தேவைப்படுகிறது ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் முதல்வருக்கு கசக்கிறது. இன்று பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தூக்குகிறார்கள் என்றால் நாளை மாநிலத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தூக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இவ்வாறு பேரறிவாளன் கூறினார்.