புதுடெல்லி, மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும், ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த விழாவில் மத்திய மந்திரிகள் இந்த ஆணைகளை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 2-வது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தற்போது இன்று (வியாழக்கிழமை) மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.
ரெயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்- துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள், (https://portal.igotkarmayogi.gov.in/) எனும் இணையதளம் வழியாக, 800-க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகளை படித்து தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.