தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மழை பெய்யாத நிலையில் தற்போதுதான் சென்னையில் மழை பெய்து வருகிறது.கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை சற்றே ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. இரவில் இடி-மின்னலுடன் மிரட்டிய மழை பல இடங்களில் விட்டு விட்டு பெய்தது. இன்று காலை 6 மணி அளவில் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.இடி-மின்னலுடன் இருள் சூழ்ந்த நிலையில் வேப்பேரி, புரசைவாக்கம், கோயம்பேடு, கிண்டி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரத்துக்கு இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது.புரசைவாக்கம் டானா தெருவில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் மாடுகள் கட்டி வளர்க்கப்படுவது வழக்கம். இதனால் அங்கு வைக்கோல் உள்ளிட்ட பொருட்கள் தேங்கி கிடக்கும். அவைகள் மழைநீர் கால்வாயில் போய் அடைத்து விடுவதால் தண்ணீர் தேங்குவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த சாலையில் பள்ளிக்கூடங்கள் அதிகம் உள்ளது.சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவ-மாணவிகள் பாதிப்பில் இருந்து தப்பினார்கள். இருப்பினும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடனேயே இந்த சாலையை கடந்து சென்றனர். பெரம்பூர் ஜமாலியா மற்றும் டவுட்டன் சந்திப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.ஓட்டேரி வள்ளுவன் தெரு, தாசா மக்கான் தெரு, அசோக்நகர் 2-வது மெயின் ரோடு, கோயம்பேடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் அதிக அளவில் தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றினர்.கோயம்பேடு பகுதியில் ஆம்னி பஸ்களில் மழைக்காலங்களில் கூடுதல் நெரிசல் ஏற்படும். இன்று காலையிலும் அதுபோன்று நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து பெண் போலீசார் நெரிசலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நெரிசலான நேரத்திலும் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிய டிரைவர்களை எச்சரித்த படியே பெண் போலீசார் பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் ரோட்டில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.மயிலாப்பூர் பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதே போன்று சென்னை புறநகர் முழுவதும் மழைநீர் தேங்கிய இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனேயே சாலைகளை கடந்து சென்றதை காண முடிந்தது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடையாறில் 72 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெருங்குடி 44 மி.மீ., ஆலந்தூர் 37 மி.மீ. மழை பெய்துள்ளது.