திருவண்ணாமலை: அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பொறியியல் கல்லூரியில் கணக்கில் வராத ரூ 18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் வேலு, (வயது 72.) இவரது வீடு, அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளோர் வீடு என, தமிழகம் முழுதும், 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் உள்ள வேலுவின் மகன் கம்பன் வீடு,கான்ட்ராக்டர் வெங்கட் வீடு, வேலுவிற்கு சொந்தமான, தென்மாத்துார் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் , மற்றும் கரூர், பெரியார் நகரில் உள்ள முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலர் வாசுகி முருகேசனின் தங்கை பத்மா வீடு, சுரேஷ் என்பவரது நிதி நிறுவனம் மற்றும் வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சியில் சுரேஷ் மாமனார் சக்திவேல் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது.
இந்நிலையில் வேலுவிற்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 18 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்பாசாமி நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனயில் கணக்கில் வராத ரூ. 250 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.