நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய அவர், இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு என்றும் காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டில் கோட்டையில் கொடி ஏற்றுவதை தாம் பெருமையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 என்பதில் இருந்து ரூ.11,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த அவர், நடப்பாண்டில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ், நாள்தோறும் 50 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் ரூ.850க்கு மேல் சேமிக்கப்படுகிறது.
“கோடிக்கணக்கான பெண்களின் பொருளியல் நிலையை மேம்படுத்தி உள்ளோம். நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறோம். புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்துச் சேவை எனப் பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்துக்கு ‘விடியல் பயணம்’ எனப் பெயர் சூட்டப்படும் என்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால்தான் ‘நீட்’ போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
“சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கி வருகின்றன. நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப் படும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து வீரதீரச் செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் காவல் பதக்கம், தகைசால் தமிழர் விருது, முதல்வரின் இளைஞர் விருது, நல் ஆளுமை விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் வழங்கிக் கௌரவித்தார்.