பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து பயங்கரமாக மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் பலர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரறிவாளன் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனிடையே பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.
இந்தநிலையில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பின்னர் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
உதகையில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுதலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி திமு.க.எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.