”வரும் 21ம் தேதி நடத்தப்படும், ‘குரூப் – 2, 2 ஏ’ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில், 58 ஆயிரத்து 900 தேர்வு அறைகளில், 11.78 லட்சம் பேர் எழுத உள்ளனர். வினா, விடைத்தாள் வாகனங்களை கண்காணிக்க, கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது,” என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் பல்வேறு துறைகளில், ‘குரூப் – 2, 2 ஏ’ பதவிகளில், 5,529 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், முதல் நிலை தகுதி தேர்வு வரும், 21ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, 6.82 லட்சம் பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 14 ஆயிரத்து 531 மாற்று திறனாளிகள் உள்பட, 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் வழியில் படித்ததாக, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உடல் குறைபாடுடைய மாற்று திறனாளிகள் தேர்வு எழுத, 1,800 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பொது தமிழ்ப் பாடத்துக்கு, 9.47 லட்சம் பேரும்; பொது ஆங்கிலம் பிரிவுக்கு, 2.31 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, மொத்த தேர்வர்களில், 9.10 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மற்றவர்களும் விரைந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.58,900 தேர்வறைகள்தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில், 58 ஆயிரத்து 900 தேர்வறைகள் உள்ளன. ஒரு பதவிக்கு 10 பேர் வீதம், 5,529 பதவிகளுக்கு, 55 ஆயிரத்து 290 பேர் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், 1:10 விகிதத்தில், ஒரே மதிப்பெண்ணில் ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும், அவர்களும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்கும் வகையில், அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வினா மற்றும் விடைத்தாள்களை கையாளும் வாகனங்களுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஏற்பாட்டில், முன்னும், பின்னும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். அந்த வாகனங்களின் நகர்வுகளை அறிந்து கொள்ள, கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., வழி கண்காணிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின் போது, தேர்வாணைய உறுப்பினர்கள் பேராசிரியர் ஜோதி சிவஞானம், பாலுசாமி, ஆரோக்கியராஜ், டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் உடனிருந்தனர்.