தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 26.01.2022 அன்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன் பெற்று, சென்னை மாநகருக்குள் 18.02.2022 அன்று மாலை அலங்கார ஊர்திகள் வர இருக்கிறது. இந்த அலங்கார ஊர்திகள் 20.02.2022 முதல் 23.02.2022 வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும்.
முதல் அலங்கார ஊர்தி
இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர்புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கினைத் அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி, பரங்கியரின் ஆதிக்கத்திற்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன் முதலில் தீரமாய்ப் போரிட்டுத் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன்சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த நெற்கட்டும் செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீரமுழக்கமிட்ட நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டு தூக்கிலிடப்பட்ட, மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சிதரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியானது சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
இரண்டாவது அலங்கார ஊர்தி
இந்த ஊர்தியில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது புரட்சிகரக் கவிதைகளால் விடுதலை வேள்விக்கு வித்திட்டவரும் சுதந்திரத்திற்காக மட்டுமின்றி சமத்துவம், சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலைக்காக போராடிய பெரும்புலவன் மகாகவி பாரதியார், ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்திற்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவரும், எஸ்.எஸ். காலியோ எனும் பிரெஞ்சுக் கப்பலை வாங்கியதால், தேசத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரட்டை தீவாந்திர தண்டனை பெற்றவரும், “செக்கிழுத்தச் செம்மல்” வ.உ.சிதம்பரனார், விடுதலைக்காகப் போராடியவரும், “ஞானபானு” மற்றும் “பிரபஞ்சமித்திரன்” என்ற பத்திரிகைகளைத் தொடங்கி, தேசத் தலைவர்களின் அரிய தொண்டினை வெளியிட்டு தமிழகத்தில் விடுதலைத் தாகத்திற்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்திற்காக போராடியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
மூன்றாவது அலங்கார ஊர்தி
இந்த ஊர்தியில், சத்தியாக்கிரக அறப்போராட்டம் நடத்தியவரும், சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீண்டாமையை வேரறுக்க அரும்பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் இராஜாஜி, தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட எந்நாளும் உழைத்திட்ட கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயல்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், கலெக்டர் ஆஷ்துரையை கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன், அன்னியர்களை வீரமுடன் எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை, மாவீரன் பொல்லான், கொடிகாத்த திருப்பூர் குமரன், விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும் சிறந்த இலக்கியவாதியுமான திருச்சிராப்பள்ளி வ.வே.சு. ஐயர், அனைவராலும் போற்றப்பட்ட கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகச்சீலர் கக்கன், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பார்வையிட வருமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ. விஜயா ராணி,தெரிவித்துள்ளார்”.