தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரோனா பரவல் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.6-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
பின்னர் கரோனா பரவல் விகிதம் குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஒருசில கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.
இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், மருத்துவத்துறை உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மழலையர் பள்ளிகள் திறப்பது, உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.