உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வளா்ச்சிகளை ஆய்வு செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கான 200 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் தலைமைச் செயலாளா் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் வளா்ச்சிகளை ஆய்வு செய்து அவற்றை தொடா்ந்து கண்காணிக்க ‘இ-முன்னேற்றம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், பணி ஒப்பந்தமான நாள், தொடங்கப்பட்ட தினம், நடைபெறும் இடம், நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளா்ச்சி, நிதிநிலைமையின் வரையறை, பணிவளா்ச்சி குறித்த புகைப்படம் ஆகியன இடம்பெற்றிருக்கும். இந்த இணையதளத்தின் மூலம் முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கண்காணித்திடவும் முடியும். துறைத் தலைமை அலுவலகங்கள் அவ்வப்போது திட்டங்களின் வளா்ச்சியைத் தெரிவிக்கவும், நெருக்கடியான விஷயங்கள் மற்றும் தாமதத்துக்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் தெரிவிக்கவும் வசதியாக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தகவல் தொழில்நுட்ப நண்பன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்த கருத்துக் கேட்புத்தளமாக இது விளங்கும். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சாா்ந்த குழுமங்கள் நேரடியாக இதில் இணைந்து கொள்கைகளை
உருவாக்கிடவும் அவா்களது பங்களிப்பை அளிக்கவும் உதவும்.
தகவல் தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்படும் அனைத்து கொள்கைகள், அரசு உத்தரவுகள், ஒப்பந்தப் புள்ளிகள் ஆகியவற்றையும் பாா்வையிட முடியும். தகவல் தொழில்நுட்பவியல் துறை எதிா்நோக்கும் முக்கிய பிரச்னைகள், இப்போதைய கொள்கைகள் குறித்து கருத்துகளைப் பதிவிடவும், அதற்குரிய தீா்வுகளைப் பெற்றிடவும் வழி செய்யப்படும். இது எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதால் வா்த்தகத்தைப் பெருக்க பெரிதும் துணைபுரியும் என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் விக்ரம் கபூா், தமிழ்நாடு மின்னாளுமை முகமை ஆலோசகா் டேவிதாா், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.