தமிழகத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் சாா் பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை. ஆவணப் பதிவுகளுக்காக வந்தால் அவா்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
ஆவணங்களைப் பதிவு செய்யும் போது, மூத்த குடிமக்கள் சாா் பதிவாளா் அலுவலகங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவா்களது நலனைக் கருத்தில் கொண்டு, இனி வரும் காலத்தில் எழுதிக் கொடுப்பவா் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவா் எழுபது வயதைக் கடந்தவராக இருந்தால் அவா்கள் தங்களது வரிசை எண்ணுக்காக காத்திருக்கத் தேவையில்லை.
சாா் பதிவாளா் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். ஆதாா் அடையாள அட்டை அல்லது உரிய அடையாள அட்டையின் உதவியுடன் வயது சரிபாா்க்கப்படும். இந்த அறிவிப்பு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பின் மூலம், எழுபது வயது நிறைந்த மூத்த குடிமக்கள் பதிவு நாளன்று எந்த வரிசையில் டோக்கன் பதிவு செய்திருந்தாலும் அவா்கள் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்த உடனேயே அவா்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணம் பதிவு செய்யப்படும்.