முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார்.
அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
துபாயில் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல்மாரி, வெளிநாட்டு வர்த்தக துறை அமைச்சர் டாக்டர் தானிபின் அகமது ஆகியோரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து துபாயில் நடந்த ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் துபாய் நிறுவனங்கள் தொழில் தொடங்க ரூ.2600 கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்பிறகு அங்கு நடைபெற்ற சர்வதேச கண்காட்சிக்கு சென்று தமிழக அரங்குகளை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அபுதாபி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
அபுதாபியில் உள்ள முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்பிறகு லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யூசுப் அலியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ரூ.3500 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதில் தமிழகத்தில் ரூ.2500 கோடி முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ரூ.1000 கோடியில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலையில் அபுதாபியில் நடந்த நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அதன்பிறகு துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை திரும்பினார்.
அவரை விமான நிலையத்தில் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக வெளிநாட்டுப் பயணமாக துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு வந்திருக்கிறேன்.
என்னுடைய வெளிநாட்டு பயணம் வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது, எப்படி துபாய் ஒரு பிரமாண்டமான நாடாக உருவாகி இருக்கிறதோ அது மாதிரி என்னுடைய பயணமும் மிக பிரமாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 6 மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய “நோபல் ஸ்டீல்ஸ்” துறையோடு ரூ.1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஜவுளித்துறையை சார்ந்த “ஒயிட் ஹவுஸ்” நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உணவுத்துறையை சார்ந்த “டிரான்ஸ் வெல்” குழுமத்துடன் ரூ.100 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மருத்துவ துறையை சார்ந்த ஆஸ்டர் டி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த “ஷெராம்” நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த லுலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த 6 நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.6,100 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது.
ஆகவே இந்த பயணம் ஒரு மகத்தான பயணமாக வெற்றிப் பயணமாக அமைந்தது என்பதை நான் மகிழ்ச்சியோடு உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று அந்த நாட்டினுடைய முக்கியமான துறைகளின் அமைச்சர்களையும், அரசு சார்ந்த அலுவலர்களையும், பெரிய பெரிய நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து உரையாற்றி இருக்கிறேன்.
துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பெரும் நிதி மேலாண்மை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்கள், சிறு துறைமுகங்கள் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல், தொழிற் பூங்காக்கள் உருவாக்கக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய அவைகள் முன்வந்துள்ளன.
தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதை நான் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவக் கூடிய தொழில் தொடங்க உதவக்கூடிய சாதகமான சூழல் அமைந்திருப்பதை சொல்லி எல்லோரும் அங்கு என்னை பாராட்டினார்கள். தமிழகத்தை ஒட்டு மொத்தமாக பாராட்டி உள்ளனர்.
இப்போது 6 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.
நான் சந்தித்த அனைவரையும் தமிழ்நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களது வருகை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நிச்சயம் அமையப்போகிறது.
ஜவுளித்துறை, மருத்துவ சேவைத்துறை, உணவு பதப்படுத்துதல், இரும்பு தளவாடங்கள் செய்தல் ஆகிய துறைகள் நிச்சயமாக வளர்ச்சி பெறும்.
அந்த வகையில் துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளம் அமைத்தது. அதே போல் நம்முடைய தொழில் துறை அமைச்சரும் அவருக்கு துணை நிற்க கூடிய தொழில்துறை அதிகாரிகளும் மிகவும் சிறப்பான வகையில், நம்முடைய பிரச்சினைகளை எல்லாம் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் தமிழ்நாட்டில் தொழில் துறையின் கீழ் இயங்கக் கூடிய தொழில் வழிகாட்டு நிறுவனம் அதன் மூலமாக இருநாடுகளிடம் இருந்து மேலும் முதலீடுகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்களாகத்தான் இருந்தது. ஒப்பந்தம் போட்டதோடு சரி. ஆனால் நாங்கள் ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம்.
அதைவிட முக்கியமாக அந்த நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் தொடங்க நடவடிக்கைகள் எடுப்பதையும், துரிதப்படுத்துவதுடன் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் ‘டேஷ்போர்டு’ எழுதி வைத்து மாதந்தோறும் அதை நாங்கள் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அந்த தொழிலை தொடங்கி ஒரு நல்ல சூழலை உருவாக்கப் போகிறோம். வேலைவாய்ப்பை உருவாக்க போகிறோம்.
இதனை உடன் வந்த அதிகாரிகளுக்கும் நான் உத்தரவாக பிறப்பித்து இருக்கிறேன். தொழில்துறைக்கு நன்றி சொன்னது போலவே, துபாய், அபுதாபி வாழ் தமிழர்களுக்கும் இந்த நேரத்திலே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அவர்கள் தந்த வரவேற்பு மிகவும் எழுச்சியோடு, உணர்ச்சியோடு இருந்தது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், நான் அங்கு சென்றபோது தமிழ்நாட்டில் இருந்த உணர்வைதான் நான் பெற்றேன். அந்த அளவுக்கு உற்சாகத்தை வரவேற்பை எனக்கு வழங்கி இருக்கிறார்கள்.
எனக்கே ஒரு சந்தேகம் வந்தது. இது தமிழ்நாடா அல்லது துபாயா என்று கூட சந்தேகம் வந்தது. அந்த வகையில் என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்பதை மீண்டும் மீண்டும் உங்கள் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- துபாய் தொழில் அதிபர்களுக்கு எந்த அளவுக்கு இங்கு தொழில் தொடங்க எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்த அளவுக்கு நீங்கள் நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்.
பதில்:- ஒப்பந்தம் நேரடியாக போட்டுள்ளோம். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினீர்கள் என்றால் எல்லா விதமான சலுகைகளும் எந்தவித நிபந்தனை இல்லாமல் முறையான வகையில் தொழில் தொடங்குவதற்கான சூழலை நிச்சயமாக உருவாக்கி தருகிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளோம். அவர்களும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள்.
கேள்வி:- புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறை தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்?
பதில்:- ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். அந்த தேதிக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி:- உங்கள் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- அவர்கள் எதிர்க்கட்சி. அப்படித்தான் சொல்வார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படுவது கிடையாது.
கேள்வி:- இப்போது ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றதுபோல் வேறு நாடு களுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி இருக் கிறது?
பதில்:- தொழில் தொடங்க கூடிய சூழ்நிலைகளை, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய சூழ்நிலைகளை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலை வருகிறபோது அதை நான் நிச்சயமாக பயன்படுத்துவேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி:- ஏற்கனவே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்த்த முதலீட்டு நிலவரங்கள் எப்படி உள்ளது? அடுத்து இந்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
பதில்:- இப்போது 6100 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.